search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மையம்"

    பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் 12 தபால் நிலையங்களில் விரைவில் புதிய மையங்கள் திறக்கப்படும். விண்ணப்பித்த 6-வது நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறினார். #Passport
    சென்னை:

    பாஸ்போர்ட் வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட் சேவா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே. அசோக்பாபு கூறியதாவது:-

    பாஸ்போர்ட் வழங்கும் சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் காவல் துறையின் சரிபார்ப்புக்காக ‘எம் பாஸ்போர்ட் போலீஸ் செயலி’ யை கடந்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதற்காக 1,700 ‘கை கணினி’ (டேப்லெட்) வாங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்ப்பு பணியை காவல்துறை துரிதமாக செய்தது. அதன்பின்னர் தமிழகத்தில் 11 லட்சத்து 66 ஆயிரத்து 990 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் 63 நாட்கள், திருச்சி புறநகர் 51 நாட்கள், அரியலூர் 48 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு திரும்பி வந்தன.

    பொதுவாக 21 நாட்களுக்கு பிறகு பரிசீலனை செய்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு ரூ.50-ம், 21 நாட்களுக்கு முன்பாக பரிசீலனை செய்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரும் விண்ணப்பங்களுக்கு பரிசீலனை கட்டணம் ரூ.150 கட்டணமும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு விரைவான சேவை மூலம் 21 நாட்களுக்கு முன்பாகவே பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் முழு தொகை மாநில அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சராசரியாக விண்ணப்பித்த 6 நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் 10 சதவீதம் தமிழகத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள 4 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் தமிழகத்தில் சென்னை (வடக்கு) கடற்கரை ரெயில் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டை, ஆரணி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராஜபாளையம், போடிநாயக்கனூர், ராமநாதபுரம், குன்னூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 12 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் மையம் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.

    இங்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைனில் அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Passport
    ×